மூட்டுவலிக்கு காரணம் பரிணாம வளர்ச்சி

boi

மனிதர்கள், இடுப்பு, தோள்பட்டை மற்றும் முட்டி வலியில் அதிகம் அவதிப்படுவதற்கான முக்கிய காரணத்தை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக (oxford University) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் 400 மில்லியன் காலத்திய 3௦௦ இனங்களின் (species) எலும்புகளின் முப்பரிமாண மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். எலும்புகள் காலப்போக்கில் என்ன மாறுதல்களை அடைந்தன என்று ஆராய்ந்தபோது மனிதன் நேராக இரு கால்களால் நிற்க ஆரம்பித்த போது தான் எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது என கண்டுபிடித்தனர். அந்த மாற்றம் தான் வலிகளுக்கு காரானமானது. அதாவது மனிதர்கள் பரிணமித்த விதம் தான் நவீன கால வாழ்க்கையில் ஏற்படும் வலிகளின் முக்கிய காரணங்களில் ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாலு காலில் நடந்த உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து இரண்டு காலில் நடக்க தொடங்கிய போது முழு பாரத்தையும் தாங்க தொடை எலும்பின் கழுத்து பகுதி விரிவடைய ஆரம்பித்தது. விரிவடையும் போது எலும்புகளுக்கு இடையில் செல்லும் நரம்புகளும் ரத்தநாளங்களும் குறுகி முட்டி வலி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மேம்பட்ட வடிவில்   மூட்டு மாற்று வடிவமைப்பதிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன

பிசியோதெரபி மற்றும் சரியான ஆசன நிலை (posture) மூலம் இந்த பிரச்சனை நம் சந்ததியினருக்கும் வராமல் ஓரளவு தடுக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Source BBC

இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்தம்

இரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளிப்பர்.

பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந் திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம் (Empa) ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டி டியூட் (Adolphe Merkle Institute)’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி  (Harvard Medical school) ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன் நோய் எதிர்பொருளை (antibody) மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாடியை மிக நுண்ணிய இரும்புத்துகள்களில் பூசி, அத்துகள்களை இரத்தத்தில் கலப்பர். அதன் பிறகு நோயாளியின் உடலிலிருந்து அந்த இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்த டயாலிசிஸ் (Magnetic Dialysis)  இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்துவர்.

nonfatal-attraction

இதனால் இரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு விடும். தனிப்படுத்தப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், இரத்தம் துய்மையானதாகி விடும். விலங்கு இரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

மேலும் பலவித நோய் கிருமிகளை நீக்குவதற்கும்,காந்தசுத்திகரிப்பின் போது ஆன்டிபாடி கலந்த இரும்புத்துகளை dialysis இயந்திரத்தில் இரத்தத்தில் (நோயாளியிடம் செலுத்தாமல்) செலுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் மனித இரத்தத்திலும் காந்தசுத்திகரிப்பு முறையை சோதிக்க உள்ளனர்.

Source Science Daily

இதயத்துக்கு ஒரு ஒட்டு

மாரடைப்பு வந்தவர்களுக்கு, இதயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி காயமடைந்து தழும்பு ஏற்பட்டு இருக்கும். இதயம் துடிப்பது, இதயமே உற்பத்தி செய்யும் சிறிய அளவினாலான மின்சாரத்தால் (electrical impulses) தான். இந்த தழும்பு, மின்சாரம்  உற்பத்தியாவதற்கும்  கடத்துவதற்கும்  தடையாக இருக்கும்.  இதயத்தின் மற்ற பகுதி செயல்பட்டு, ஒரு பகுதி செயல்படாமல் இருப்பது, இதயத் துடிப்பின் லயத்தை பாதிப்பதோடு, காலப்போக்கில், ‘அரித்மியா’ (cardiac arrhythmia) போன்ற குறைபாடுகள் வரலாம்.

இதயத்தின் செயல்படாத பகுதியை செயல்பட வைக்க, இங்கிலாந்தின் இம்ப்பீரியல் கல்லூரியின் மோலி ஸ்டீவன்ஸ் (Dr. Molly Stevens) மற்றும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் டாமியா மாவாட்(Dr. Damia Mawad)  தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஒட்டை (patch) உருவாக்கி இருக்கின்றனர்.

 

 

damia_400_300
Dr. Damia Mawad
images
Dr Molly Stevens

கடல் வாழ் இறால் வகை ஒன்றின் ஓட்டிலிருந்து எடுக்கப் பட்ட, ‘சிடோசான் (chitosan)’, ‘பாலிஅனிலின் (polyaniline)’ என்ற மின்சாரத்தை கடத்தும் திறனுள்ள பாலிமர் மற்றும் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட, ‘பைடிக்’ அமிலம் (phytic acid) ஆகிய பொருட்களை கலந்து, இந்த இதயத்திற்கான ஒட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த ஒட்டை இதயத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டும்போது, மற்ற பகுதியிலிருந்து அப்பகுதிக்கும் மின்சாரம் கிடைத்து துடிப்பு உருவாகிறது. இந்த ஒட்டு இதயத்தின் தசைகளோடு கலந்துவிடாது என்றும், இதை தையல் போட்டு ஒட்ட வேண்டியதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயத்தின் மீது ஒட்டை வைத்து, பச்சை நிற லேசர் கதிர்கள் மூலம் லேசாக பொசுக்கினால் அது ஒட்டிக்கொள்ளும். எலிகள் மீது இந்த ஒட்டு வெற்றி கரமாக வேலை செய்வதாகவும், விரைவில் மனித இதயத்தின் மீது சோதனைகள் துவங்கவிருப்பதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source Daily Mail

அழிவை நோக்கி ஆஸ்திரேலியாவின் பவழப்பாறைகள்

cora

உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ( Great Barrier Reef) ஒன்று.  இது சுமார் 300000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 3000 க்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை உடையது. கடலுக்கு அடியில் பல வண்ணங்களில் கண்ணை கவரும் வண்ணம் காட்சியளிக்கும் பவளப்பாறைகள் பிரபல சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்கிறது.

ஐநா கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் (UNESCO) உலக பாரம்பரிய சொத்து  (world heritage site ) பட்டியலில் கிரேட்  பாரியர்  ரீஃப்  இடம்பெற்றுள்ளது.

ஆனால் மே 2016ல் அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட  விஞ்ஞானிகள் 93  சதவிகித பவளப்பாறைகள் வண்ணமிழந்து  வெளுத்துப்போன  (coral bleaching) நிலையில் இருந்ததை கண்டனர்.  ஆறு மாதங்களுக்கு பிறகு சோதித்த போது அவற்றில் பெரும்பான்மையானவை  இறந்து போயிருந்தன. 25 மில்லியன் ஆண்டுகளாக உயிருடன் இருந்த பவளப்பாறைகள் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

corall

பவழத்தின் நிறம் அதன் திசுக்களில் வாழும் நுண்ணிய பாசிகளால் (microscopic algae) கிடைப்பது. நீரின் வெப்பம் உயர்வதால் பவழம் அழுத்தத்திற்கு (stress) உள்ளாகிறது. அப்போது அதன் திசுக்களிலிருந்து பாசியை வெளியேற்றுகிறது. அதனால் வெறும் திசுக்கள், வெள்ளை அல்லது கண்ணாடி நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த நிலை தொடரும் போது அவை பலவீனம் அடைகின்றன. அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் தடைபடுகின்றன. வெப்பம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் நாளடைவில் அவை இறக்கின்றன அல்லது மீண்டும் பழைய நிலையை அடைய நீண்ட காலமாகிறது.

விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Source The Telegraph

அண்டார்டிக்காவிலிருந்து பிரியும் பிரமாண்ட பனிப்பாறை

Larsen C என பெயரிடப்பட்டுள்ள பிரமாண்ட பனிப்பாறை  அண்டார்டிகா கண்டத்தில் இருந்து  பிரியப் போகிறது. இந்த பிளவு தற்சமயம் 100 மீட்டர் அகலமாகவும் அரை கிலோமீட்டர் ஆழமாகவும் இருக்கிறது. 5000 சதுர கிலோமீட்டர்கள்  பரப்பளவுள்ள இந்த பனிப்பாறை, 20 கிலோமீட்டர் அளவுக்கு தான் அண்டார்டிகாவுடன் இணைந்து இருக்கிறது. இது பிரிந்தால் அண்டார்டிகாவின் பரப்பளவில் பெரிய மாற்றம் ஏற்படும். கடல் மட்டம் இதனால் உயராது.  ஆனால் பனிப்பாறை பிரிந்த  பிறகு  உடைந்து போனால் கடல் மட்டம் 10 cm அளவு உயரலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதற்கு முன்னால் Larsen B என்ற ஐஸ்பாறை 2002-லும் Larsen A என்ற  ஐஸ்பாறை 1995-லும் அண்டார்டிக்காவிலிருந்து  பிளவுபட்டது  குறிப்பிடத்தக்கது.

iceberg
2002ல் Larsen B பிரிந்து போன நிகழ்வு

Source BBC

 

மனித உடலின் புதிய உறுப்பு மிசென்ட்ரி (Mesentry)

வயிற்றுப்பகுதியின்  உள் படலமாக(abdominal lining)  இருக்கும் பெரிடோனியத்தின்   இரட்டை மடிப்பாக (Double fold of Peritoneum) மிசென்ட்ரி (Mesentry) என்ற ஒரு புதிய உறுப்பு இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இது வயிற்றையும்  குடலையும் இணைக்கிறது.

இந்த அமைப்பை பற்றி முதலில் குறிப்பிட்டவர் Leonardo da Vinci. .பல நூற்றாண்டுகளாக இதை ஒரு தேவையற்ற அமைப்பாகவே கருதினர். இதை சிக்கலான  பல துண்டு பகுதிகளை உடைய அமைப்பாக எண்ணியிருந்தார்கள்.

ஆனால் 2012ஆம் ஆண்டுஅயர்லாந்தை (Ireland ) சார்ந்த விஞ்ஞானி J Calvin Coffey,  மிசென்ட்ரி ஒரு எளிமையான தொடர்ச்சியான அமைப்பு என்று கண்டுபிடித்தார். நான்கு வருடங்களாக இதற்கான ஆதாரங்களை திரட்டி ஜனவரி 2017ல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மிசென்ட்ரியின் குறிப்பிட்ட செயல்பாடு என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மிசென்ட்ரி  பற்றிய ஆராய்ச்சிகளால்  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த உறுப்பின் பங்கு என்ன என்று தெரிய வரும்.

உலகின் தலை சிறந்த மருத்துவ  நூலான Grey’s Anatomyயும் மிசென்ட்ரி பற்றிய விளக்கங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.

Source Time and Science Alert

 

நோயை காட்டிக் கொடுக்கும் மூச்சுக் காற்று

breat

கி.மு.400 ம் வருடம் வாழ்ந்த மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரட்டீஸ் தன்னுடைய மாணவர்களுக்கு நோயாளியின் மூச்சுக்காற்றை நுகர்ந்து பார்த்தே நோயை கண்டுபிடிக்க அறிவுருத்தினார்.

இதையே இப்போது சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளின் குழு ஒன்று, நோயாளிகளின் மூச்சுக் காற்றை வைத்தே அவர்களுக்கு இருக்கும் நோய்களின் அறிகுறிகளை, 86 சதவீத துல்லியத்துடன் அறிய முடியும் என கண்டறிந்துள்ளனர்.இஸ்ரேலைச் சேர்ந்த ஹோசம் ஹெய்க் என்ற விஞ்ஞானி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், புற்று நோய் முதல், அல்சைமர்ஸ் நோய் வரை, 17 நோய்களை கண்டறிய உதவுகிறது.

நாய்களை ஒரு குறிப்பிட்ட நோயின் வாடைக்கு பழக்கப்படுத்தினால் அது அந்த நோய் தாக்கியவரை கண்டுபிடிக்கும்.குறிப்பாக கேன்சர் நோயாளிகளை நாய் கண்டறிந்தது. இதுவே இந்த சாதனம் கண்டுபிடிக்க உத்வேகம் அளித்தது என்கிறார் ஹெய்க். இவரது மூச்சு பகுப்பாய்வி  ( Breathe Analyser ) மூச்சிலுள்ள  பலவித வேதிப் பொருட்களை பகுத்தறியும் திறன் கொண்டவை. பகுத்தறிந்த தகவல்களை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தந்தால், அது தன் தகவல் தொகுப்பை ஆராய்ந்து,  நோயாளிக்கு, இன்ன நோயின் அறிகுறி இருப்பதை நொடியில் தெரிவித்துவிடும்.

கார்பன் நேனோ குழாய்கள்  மற்றும் தங்கத் துகள்களையும், செயற்கை நுண்ணறிவையும் கொண்டு ஹெய்க் உருவாக்கிய சாதனத்தின் மூலம் நோயாளிகளின் மூச்சுக் காற்றை ஆராய்ச்சியாளர்கள் அலசினர். அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் லாத்வியா ஆகிய நாடுகளில் உள்ள, 1,404 பேர் மூச்சு சோதனையில் பங்கேற்றனர். இதில், 813 பேருக்கு பட்டியலிடப்பட்ட, 17 நோய்களில் ஒன்றாவது இருந்தது தெரியவந்தது. மீதமுள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மனித கைவிரல் ரேகையைப் போல, உடலில் உள்ள ஒவ்வொரு நோய்க்கும் தனிப்பட்ட வேதிப் பொருட்கள் மூச்சில் கலப்பதுண்டு. இதை வைத்து தான் ஹெய்க்கின் அணியினர், 17 விதமான நோய்களை கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளனர்.’நோய்களுக்கான அறிகுறிகளைக் கண்டறிய மூச்சு ஒரு அற்புதமான வழி. உடலுக்குள் எதையும் செலுத்தாமல், நோயாளிக்கு வலி ஏற்படுத்தாமல் மருத்துவர்களால் அதைச் செய்ய முடியும். எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய முடியும்’ என்கிறார் ஹெய்க்.

Source Daily Mail

காமா கதிர்களை வெளியிடும் நட்சத்திரம்

lmc_p3_light_curve

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் (Fermi Gamma-ray Space Telescope)  நடத்திய ஆய்வில் முதன் முதலாக  பிரிதொரு  நட்சத்திர மண்டலத்தில் (Galaxy), ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பு  (Dual star system) காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LMC P3 என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டை நட்சத்திரத்தில்  ஒரு பெரிய நட்சத்திரமும், நொறுக்கப்பட்ட  நட்சத்திர  அடுக்கும்  (Crushed stellar core) ஒன்றுக்கொன்று ஊடாடி தொடர்ச்சியான  காமா கதிர்களை  வெளியிடுவது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு முன் இது போல்  காமா கதிர்களை  வெளியிடும்  (ஐந்து)  நட்சத்திர அமைப்புகள்  நம்முடைய  நட்சத்திர மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், LMC P3 வெகு தொலைவில் அதாவது பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் வேறொரு நட்சத்திர மண்டலத்தில் காணப்படுவதாலும், மிகவும்  பிரகாசமாக  காணப்படுவதாலும் இது முக்கியத்துவம்  வாய்ந்ததாகிறது  . LMC P3 வட்டப்பாதையில் (orbit)  சுற்றி வரும்போது வெளியிடும் காமா கதிர்களின் அளவு வேறுபடுகிறது . இது  குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Source NASA

அதிகரிக்கும் ஆர்டிக் வெப்பம்

arctic-4

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட அதிக வெப்பக்காற்று வீசுகிறது.வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

Source The Guardian