இரவில் ஒளிரும் பச்சை புளோரசென்ட் தவளை

இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் ஒளிரும் புதிய வகை பச்சை புளோரசென்ட் (FLUORESCENT) தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பகல் பொழுதுகளில் அந்த தவளையின் வண்ணம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நேரங்களில் தெரிகிறது. ஆனால் இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீலத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன. குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ஸ் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப் பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது முன்பு அறியப்பட்டது. தற்போது தவளையிடமும் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனிதனைத் தவிர, பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். எனினும் பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

atelopus-frog-clown-frog

தென் அமெரிக்க நாடான சூரி நாமில் ஏற்கெனவே ஊதா நிறத்துடன் மின்னும் தவளை 2006-ம் ஆண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source ஹிந்து

சின்னஞ்சிறு தவளை இனங்கள்

கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிதாக ஏழு சின்னஞ்சிறு தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இரவுத் தவளைகள் ஆகும். இந்த ஏழு தவளைகளையும் சேர்த்து மொத்தம் 35 வகையான இரவுத் தவளைகள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தவளை இனங்கள் அனைத்தும் நகங்களில் அமர்ந்துகொள்ளும் அளவில் மிகச் சிறியவை. சுமார் 0.7 அங்குலம் அளவு கொண்டவை. அவற்றுள் நான்கு தவளைகள் 0.5 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியவை. இவை ஈரமான இலை குப்பையின் அடியிலும் சதுப்பு நிலத்திலும் காணப்பட்டன. இவை கிரிக்கெட் என்ற பூச்சியை போன்று குரல் எழுப்பின. இவற்றிற்கு மற்ற தவளைகள் போல் கால் விரல்களை இணைக்கும் மெல்லிய தோல் பகுதி (webbing between the toes) இல்லை.

பியர்ஜெ (PeerJ) என்னும் ஆராய்ச்சி இதழில் பிப்ரவரி 21-2017ல் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. கேரள மாநில வனத்துறையுடன் இணைந்து சோனாலி கார்க் (Sonali Garg) தலைமையிலான டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

Source Washington post

தவளைகளுக்கு இருட்டிலும் நிறங்கள் தெரியும்

தவளைகள், மற்றும் தேரைகளின் இரவு பார்வை, மற்ற ஏனைய  விலங்குகளை விட மேன்மையானது. இருட்டாக இருக்கும் போது மனிதர்களால் எதையும் பார்க்க முடியாது அல்லது நிறமில்லாத ஒரு பொருளாக மங்கலாக தெரியும். ஆனால், ஸ்வீடன் லண்ட் பல்கலைக்கழகத்தில் (Lund University, Sweden.) அல்மெட் கெல்பர் (Almut Kelber) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், தவளைகளால் இருட்டில் கூட நிறங்களை காண முடியும் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.

முதுகெலும்புள்ள பிராணிகளுக்கு,  ரெட்டினாவில், குச்சிகள் மற்றும் கூம்புகள் (rods and cones) என்று இரண்டு வகையான காட்சி செல்கள் இருக்கும்.கூம்புகள் (cones) நிறம் பார்க்க உதவுகின்றன, ஆனால் அவைகளுக்கு பொதுவாக ஒளி நிறைய தேவைப்படும். எனவே,  இருட்டில் அவை செயல்படுவதில்லை. இதனால் நிறம் தெரிவதில்லை. அந்த சமயத்தில் குச்சிகள் (rods), கருப்பு வெள்ளையில் மங்கலாக காட்சியை தருகிறது.

ஆனால் தவளைகள், மற்றும் தேரைகளின் குச்சிகள் (rods), இரண்டு வெவ்வேறு வகையான உணர்திறன்கள் (two different sensitivities) கொண்டவை. இந்த தனித்தன்மை வாய்ந்த குச்சிகள், தவளைகளுக்கு இருட்டிலும் நிறங்களை அடையாளம் காட்டுகிறது.

தவளைகளின் இந்த தனித்தன்மை, இருட்டில் உணவு தேடுவதற்கும், துணையை தேடுவதற்கும் மிகுந்த உதவி புரிகிறது.

Source Science Daily